இசையும் உணர்வும்... இசையுணர்வும்

இசை பற்றி நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு கேள்வி எழுந்தது. இசை எவ்வாறு ஒரு உணர்வை பிரதிபலிக்க முடியும் என்று கேட்டார். அதற்கு நான் ஏதும் பதில் சொல்லவில்லை. இளையராஜா இசையமைத்த படங்களின் பின்னனி இசையை வரிசையாக போட்டுக் காண்பித்தேன். அவர் மௌனமானார். இதை இங்கே சொல்லக் காரணமிருக்கிறது. என்னிடம் இசையின் ஞானம் ஏதுமில்லை. ஆனால் எனக்கும் இசைக்குமான புரிதல் ஒன்று உண்டு; அதை ஏற்படுத்தியவர் இளையராஜா.

எல்லா உணர்வுகளுக்குமான இசை இங்கே இருக்கிறது. இதுவரை என்னிடம் தோன்றிய எல்லா உணர்வுகளோடும் இசை உறவாடியிருக்கிறது. நான் முதன் முதலாக கேட்டதாக நினைவிலிருக்கும் பாடல்கள்..

நான் காற்று வாங்க போனேன்...ஒரு கவிதை வாங்கி வந்தேன்...

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா..?

இவை இரண்டும் தான் என் முதல் ஞாபகத்தில் இருப்பவை. முதல் பாடல், எங்கள் அடுத்த வீட்டுக்காரரின் ரேடியோவில் ஒலித்தது. எனக்குத் தெரிந்து என் முதல் திரைப்பாடல் இதுதான். அடுத்தது என் அம்மா அடிக்கடி பாடுவது. வயது சரியாக நினைவில்லை. ஆனால் கண்டிப்பாக இவை இரண்டும் ஐந்து வயதிற்குள் நான் கேட்ட பாடல்கள்.

பிறகு இளையராஜா. இளையாராஜா அவர்களின் மீது எப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது என்று சொல்லத் தெரியவில்லை. என் அடுத்த வீட்டுக்காரரின் டேப் ரிக்கார்டராகக் கூட இருக்கலாம். அது போக.. "நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.. இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பு.. நேரம் இப்போது..." இந்த வாசகத்தைக் கேட்காத நாளே இல்லை.

என் வீட்டில் அப்போது டி.வி இல்லை. டிவி பார்ப்பதற்கு அடுத்த வீட்டிற்கோ அல்லது எதிர் வீட்டிற்கோதான் செல்ல வேண்டும். அப்போது விளையாடும் நேரம் தவிர, ரேடியோ ஒன்றுதான் பொழுதுபோக்கு சாதனம். இலங்கை வானொலி எனக்கும் இசைக்குமான நெருக்கத்திற்கு உற்ற துனையாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் வரும், திருச்சி வானொலியின் ஒலிச்சித்திரம் ஏற்படுத்திய பாதிப்பு இன்றும் தொடர்கிறது. இன்றளவும் நான் என் கணினியில் திரைப்படத்தைப் போட்டுவிட்டு சமையலறையில் வேலை செய்வதுண்டு; அதே ஒலிச்சித்திரம் தான். திரையில் பார்த்து உணர வேண்டிய எல்லாவற்றையும், சப்தத்தை மட்டுமே கேட்டு உணர வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதாரணம். ஆனால் அதில் ஒரு நுட்பம் இருக்கிறது. வெறும் சப்தத்தைக் கேட்டு, இசையைக் கேட்டு நம் கண்ணில் விரியும் காட்சி ஏற்படுத்தும் உணர்வுகள், அதிர்வுகள் எல்லாமே அதிசயம். நீங்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். இதுவரை நீங்கள் பார்க்காத திரைப்படத்தை ஒலிச்சித்திரமாகக் கேட்டுப் பாருங்கள். உங்கள் கற்பனையின் எல்லைகளை மீண்டுமொருமுறை தாண்டலாம்.

வீட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டால் எல்லா குழந்தைகளும் தெருவிற்கு வந்து விடுவோம். அந்தாக்க்ஷரி விளையாடுவது மிக நல்ல பொழுதுபோக்கு. வெளிச்சம் இல்லா நேரத்தை பாடல்களால் நிரப்ப முயற்சி செய்வோம். மற்றுமொரு பொழுதுபோக்கு, ரேடியோவில் கேட்ட பாடலின் வரிகளை எழுத முயற்சிப்பது. நான் என் பள்ளி வீட்டுப்பாடங்கள் கூட அவ்வளவு சிரமப்பட்டு எழுதியது கிடையாது. வைரமுத்துவின், வாலியின் வரிகளை அவ்வளவு பாடுபட்டு எழுதியிருக்கிறேன்; பாடல் ஒலிக்கும் வேகத்திலேயே எழுதியிருக்கிறேன். இன்றைக்கு அதே போன்று எழுத முடியுமா என்று தெரியவில்லை.

பள்ளியில் நடக்கும் போட்டிகளிலெல்லாம் என் கீச் கீச் குரலில் பாடியது இளையராஜாவின் பாடல் தான். நான் பாடலுக்கு பரிசு எதுவும் வாங்கியதில்லை; ஆனால் பாடல்களை அனுபவித்திருக்கிறேன். அந்த வயதில் என்ன புரியும் என்று நீங்கள் கேட்கலாம். புரியாது தான்... ஆனால் அதை உணரலாம். இன்றும் கூட இசை என்னில் என்ன செய்கிறது என்று கேட்டால் தெரியாது. ஆனால் இசையய் நான் அனுபவிக்கிறேன். என்னுள் இசை இருக்கிறது; இசைக்குள் நான் இருக்கிறேன்.

இன்று, இளையராஜாவில் தொடங்கி... ஏ. ஆர். ரஹ்மான் வரை, எம். எஸ் தொடங்கி சுதா ரகுநாதன் வரை... மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதம், ஆப்பிரிக்க, தென்னமெரிக்க பழங்குடி இசை என எதுவும் என்னைக் கவரும். இசை என் கண்களில் காட்சியை விரியச் செய்யும்; கனவுகளை காட்டிக் கதை சொல்லும்; சுய இன்பத்தின் உச்சங்களைத் தொடச் செய்யும்; என் கோபத்தை நியாயமாக்கும்; மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்; சோகத்தை சுகமாக்க முயற்சிக்கும்.

என் வாழ்வின் ரகசியத்தை நான் இன்னும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நான் கண்டுகொண்ட ஒன்று இருக்கிறது... அது, இசை இல்லாமல் என் வாழ்வு முழுமை பெறாது என்பது தான். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.... எனக்கு இசையின் ஞானம் ஏதுமில்லை... அனுபவம் மட்டுமே...

நான் இன்னும் தலைப்பிற்கே வரவில்லை; எனைக் கவர்ந்த இசையும், இசை ஏற்படுதிய உணர்வையும் எழுத ஆரம்பித்து என் நினைவுகளில் தொலைந்துவிட்டேன்.

நினைவில் இருப்பவை இன்னும் நிறைய ....

நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்...

நண்பர்கள் ப்ரீத்தி மற்றும் சுசித்ரா அவர்களுக்கு நன்றி.


5 comments:

Unknown said...

nalla ezhuthukkal!!!!

Suchi said...

தங்கள் பதிவுக்கு நன்றி!

இசையை புரிதலுக்கும் இசையை உணருதளுக்கும் நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. ஒரு குட்டி கதை ஞாபகத்துக்கு வருகிறது. எம் எஸ் அம்மா யு.எஸ் போன போடு அவர்கள் தங்கிய வீட்டில் சாதகம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டதாம். யார் என்று அவர் கணவன் சதாசிவம் பார்க்க போன போது ஒரு வெள்ளைக்காரன். "நா பக்கத்து வீட்டுல வேல செஞ்சுகிட்டு இருந்தேன், இந்த அம்மா பாட்டு மனசுக்கு இதமா இருந்திச்சி, இங்க ஒக்காந்து கேக்கலாமா?" என்றாராம். மொழி, இனம், எல்லாம் கடந்தது தானே இசை! எல்லா கலாசாரத்திலும் கடவுள், அன்பு, மரணம் போன்ற கருத்துக்கள் இருப்பது போல எல்லா கலாச்சாரங்களிலும் இசை இருக்கிறது என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை :)

Suchi said...

please excuse the spelling errors - I can already find a couple :)

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

மிகச் சரி.

வட இந்திய நண்பர் என்னுடன் தங்கியிருந்தார். நான் சர்வ சதா காலமும் இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டே இருப்பேன் (சத்தமாகத்தான்). "I don't understand a one word in this... but this is really awesome".

தமிழைத் தவிர எந்த மொழியும் தெரியாது எனக்கு. சொல்லப்போனால், நான் என் உலகுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்தவன்.

என் வட இந்திய நண்பனின் அனுபவம் தான் எனக்கும்; சமீப காலங்களில் நான் உலக இசை கொஞ்சம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஸ்பானிய, போர்த்துகீசிய, நைஜீரிய மற்றும் பிற ஆப்பிரிக்க பழங்குடி மொழியில் கேட்கும் இசை என்னை மெய் மறக்கச் செய்கிறது. அவை ஒரு கலாச்சாரத்தை என் முன்னே வைக்கின்றன. உலகச் சமூகங்களின் இசையில் ஒரு தொடர்புச் சரடு ஒளிந்திருக்கிறது. மொழி மாத்திரமல்ல, எதுவும் தடையில்லை.

Harish said...

Well...an ample proof of Raja's genius is still echoed during radio's night hours. Every nocturnal techie will vouch how blissed they feel while listening to Raja's songs (Kaadhal Doctor anyone?) and wondering if the night could go on forever.

At least, lets be blessed that we can hear and appreciate music :)