இசையும் உணர்வும்... இசையுணர்வும் (2)

எழுத்தாளர் சுகுமாரன் உயிர்ம்மையில் இப்படி எழுதுகிறார்:

"...மாலையில் ஒலிப்பதிவுக் கூடத்தில் மறுபடியும் சந்திப்பு. உட்காரச் சொன்னார் இளையராஜா. ஒரு யாத்ரா மொழி (இயக்கம் -பிரதாப் போத்தன்) படத்தின் பின்னணி இசைப் பதிவு நடந்து கொண்டிருந்தது. ஒலிப்பதிவுக் கூடத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. படத்தின் இறுதிக்காட்சி திரையில் ஓடியது.

தகப்பனைக் கொல்லக் காத்திருந்த முறைதவறிப் பிறந்த மகன் (மோகன்லால்)அத்தனை நாட்களும் தன்னை அன்போடு அரவணைத்திருந்த பெரியவர்தான் (சிவாஜி கணேசன்) அப்பா என்று தெரிந்து கொள்கிறான். அவருக்கும் அந்த உண்மை தெரிகிறது. ‘மகனே’ என்று அழைக்கவும் முடியாமல் தவிப்புடன் ஊரை விட்டுப் போகிறார். ரயில் ஏறிப் போகும் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு ரயில் மறைந்ததும், அவரைக் குத்திக் கொல்வதற்காகத் தூக்கிக்கொண்டு திரிந்த கத்தியை வீசி எறிகிறான். அவனையும் அவன் தாயையும் அதுவரைக்கும் பராமரித்து வந்த காரணவரின் (நெடுமுடி வேணு)தோளில் சாய்ந்து நடந்து போகிறான். உச்ச கோணத்தில் அவனும் காரணவரும் நடந்து போகும் பிம்பம் உறையக் காட்சி முடிகிறது.

விளக்குகள் ஒளிர்ந்தன. இளையராஜா ஹார்மோனியம் வைத்த மேஜையில் அமர்ந்து ஸ்வரக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் எழுதி முடித்ததும் ‘நரசிம்மன்’ என்று குரல் கொடுத்தார். நரசிம்மன் வந்து பிரசாதம் வாங்குவதுபோல அந்தத் தாள்களை வாங்கினார். ஒவ்வொரு இசைஞராக வந்து அவரவர் வாத்தியத்தின் பகுதியை வாங்கிப் போனார்கள். எல்லா வாத்தியங்களும் ஆயத்தமாகிற கலவை ஒலி கேட்டது. இளையராஜா உத்தரவிட்டதும் இசைக் கோர்ப்புத் தொடங்கியது. கருவிகள் ஒத்தியங்கி ஒரு மையத்தை நோக்கிக் குவிந்தன. அது காட்சியில் தொற்றியது. சில நிமிடங்களுக்கு முன்பு மங்கலாக இருந்த காட்சியின் உணர்ச்சிக் கோலம் இப்போது செறிவாகப் புலன்களில் பதிந்தது.

ஒரு காட்சியை ஒலியாகப் பார்ப்பவரை என்னவென்று சொல்வது என்று அன்று யோசிக்கத் தொடங்கினேன். இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..."

இதை நான் இங்கே மேற்கோள் காட்டக் காரணமிருக்கிறது. தமிழ்த் திரைப்பட எல்லைகளுக்கு உட்பட்டு இசையும், உணர்வும் பற்றி நான் பேச நினைத்தால் முதலில் நான் விரும்புவது பின்னனி இசை. திரைப்படங்களைப் பொறுத்தவரை பாடல்கள் என்பது பெரும்பாலும் பொழுதுபோக்குக்காத்தான் இருந்திருக்கிறது. சமயத்தில் கதையோட்டத்தை வேகமாக நகர்த்தப் பயன் பட்டிருக்கலாம். ஆனால் பாடல்கள் அமைய முதல் காரணம் கேளிக்கை. ஆக, ஒரு கதை சொல்லப்படும் போது உங்கள் இதயத்தைத் தொட ஒரு பாலமாக இருக்கக்கூடியது பின்னனி இசை. தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, பின்னனி இசைக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர் இளையராஜா. அவருக்கு முன்னர் இருந்த திரைப்பட லட்சனங்களுக்குள் பின்னனி இசை சொற்பமான இடத்தை அல்லது ஒரு க்ளீஷே போலத்தான் இருந்திருக்கிறது.

முன்னர் இருந்தவர்கள் (குறிப்பாக எம்.எஸ்.வி அவர்கள்) பல முயற்சிகளை செய்ய முற்பட்டிருந்தாலும் அது திரைப்படங்களின் இலக்கணத்திற்குள் வந்தது போல் இல்லை. இளையராஜா அவர்களின் காலத்தில் பின்னனி இசை, தமிழ்த் திரைப்பட இலக்கணத்தில் ஒன்றாக மாறியது. அதற்கு முழு முதற் காரணம் இளையாராஜா என்றால் அது மிகையாகாது. அதே சமயம், கே.பி, பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பிற்பாடு மணிரத்னம் போன்றவர்களின் கதை சொல்லும் யுக்திகள் பின்னனி இசையை ஒரு முக்கிய கருவியாய்ப் பயன்படுத்திக் கொள்ளுமளவு இருந்தன. அதற்கு ஈடு கொடுத்தவர் இளையராஜா மட்டுமே. எண்பதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் தொடக்கம் வரை என்னால் இந்த ஒரு பெயரைத் தவிர வேறு ஒரு பெயரை நினைக்க முடியவில்லை. சந்திரபோஸ், சங்கர்-கனேஷ் போன்றவர்கள் இரண்டாம் நிலையில் பிரபலமாக இருந்தாலும் அவர்களால் இளையராஜா போன்ற ஒரு தாக்கத்தையோ, அல்லது தமிழ்த் திரைப்படங்களின் இசையை முன்னோக்கி நகர்த்தவோ முடியவில்லை.

எண்பதுகளில் தமிழ்த் திரைப்படங்களின் அடையாளமாய் இருந்த 'புதிய சிந்தனை' இயக்குனர்களின் கதை சொல்லும் யுக்தி அல்லது கதைக் களங்களினாலேயே இளையராஜாவால் அத்தகைய இலக்கணத்தை வகுக்க முடிந்தது என்றால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எத்தனையோ சாதாரன திரைப்படங்களின் காட்சிகளுக்கு ஒளியூட்டியவர் இளையராஜா. எண்பதுகளில் வந்த 'புதிய கதை'களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இது புரியும். தமிழ் திரைபட வரலாற்றில், மசாலா திரைப்படங்கள் நிறைய இருந்திருக்கின்றன. அதில் மிக மோசமான சிலவற்றை நீங்கள் எண்பதுகளில் காண முடியும். ஆனால் அது போன்ற, மசாலா அல்லது சாதாரண திரைப்படங்களில் கூட அதன் எல்லைகளுக்கு உட்பட்ட பல மாயங்களைச் செய்தவர் இளையராஜா. இன்றைய தினத்தில், இளையராஜாவின் பின்னனி இசையின் இலக்கணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ரஹ்மானைத் தவிர வேறு யாராலும் இயலுமா என்பது சந்தேகம் தான். ஏனெனில், இளையராஜா ஏற்படுத்திய உலகம் மிகப் பரந்தது, ஆழமானதும் கூட. பரப்பும், ஆழமும் சேர்ந்திருப்பது அரிது. ரஹ்மான் அவர்கள் கூட மிகப் பரந்த பரப்பில் பல்வேறு பட்ட முயற்சிகளைச் செய்தாலும், ஆழமான படைப்புகளுக்குக் குறைவான வாய்ப்புகளே அமைகின்றன.

இன்னும் நிறைய பேசுவோம்...

குறிப்பு: 'மசாலா' திரைப்படங்கள் என்பதை 'வெகுஜன' திரைப்படங்கள் என்று அறிக.


0 comments: