தென்றல் வந்து தீண்டும் போது..?

பாடல்: தென்றல் வந்து தீண்டும் போது..
இசை: இளையராஜா
கவிதை: வாலி
கருத்தாக்கம்: நாசர்

தமிழ்த் திரை இசைப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு தனி இடமுண்டு. எழுத்தும், இசையும், இயக்குனரின் சிந்தனையும் ஒரு புள்ளியில் மையம் கொண்டு கலை வெளிப்பட்ட பாடல். சில பாடல்களே அவ்வாறு அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இது முக்கியமான பாடல்.

இந்தப் பாடலை வடித்த மூன்று சிற்பிகளுக்குள்ளும் இருக்கும் தேடல் இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும். அவரவர்களுடைய தேடலும், அதற்கான தோராயமான விடையும் சேர்ந்து தங்களுடைய மொழியால் விளக்கியிருப்பார்கள். ராஜா தன்னுடைய இசையிலும், குரலிலும், வாலி தன்னுடைய எழுத்தாலும், நாசர் தன்னுடய கருத்தாக்கத்தாலும், திரையில் காட்டிய காட்சிகளாலும். நாசருடன் நடிக்கும் ரேவதி அற்புதம். தமிழில் இன்று இதைப் போன்று நடிகைகள் குறைவு.




வரையறுக்க முடியாத ஒன்றை வரையறை செய்ய இயலுமா? தோராயமான வரையறை (approximation) சரியான அறிதலைக் கொடுக்குமா? என்று இந்தப் பாடல் பல தத்துவார்த்தமான கேள்விகளை நம் முன்னே வைத்து அதற்கான விடை சொல்ல முயற்சி செய்கிறது. இதைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்; மனிதனின் தேடல் எல்லாமே வரையறை செய்ய முடியாத ஒன்றை வரையறை செய்து தன் கட்டுக்குள் வைப்பதிலேயே மையம் கொண்டிருக்கிறது.

என் குருநாதர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னது இது... என்னுடைய கேள்வி "கோயில் என்பதன் பொருள் என்ன?"

".. கோயில் என்பது இந்த அண்டத்தை, வெளியை அளக்க முயற்சித்ததில் வந்தது. அளக்க முடியாத ஒன்றை அளவிட முடிந்த ஒன்றால் விளக்க முயல்வது..."

இது போலவே காலமும். காலத்தை நாம் நாளாக, மணியாக, நிமிடங்களாக, நொடியாக அளவிடுவதும் அது போலவே. அது ஒரு தோராயமான அளவீடு.

அது போலவே, இந்த கதையின் நாயகிக்கு கண் தெரியாது. அவளுக்கு வண்ணங்கள் எவ்வாறிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதை யாராலும் வரையறை செய்ய இயலுமா? பெண் போல இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சிந்தித்ததுண்டு. ஆனால் அதை வரையறுக்க முடியுமா? முடியாது. என்னுடைய போத மனத்தைத் தாண்டி எதைச் சிந்தித்தாலும் அது ஒரு கனவாகவே இருக்கிறது. உணர்வது என்பது இயலாத ஒன்று.

கண் தெரியாதவருக்கு வண்ணங்கள் பற்றி விளக்குவது அது போலத்தான்.
தானத் தந்த தானத் தந்த
தானத் தந்தத் தனனா

தந்தனன தானனான
தான தனனா...தனனனா

பாடல் தொடங்கும் போது சந்தத்தை பல பெண்கள் சேர்ந்து பாடியிருப்பார்கள். அங்கிருந்து ராஜா தொடங்குவார். அப்போது திரையில் வண்ணங்களினால் ஒரு முகம் வரையப்படுகிறது. ஏதோ கிறுக்குவது போன்று தொடங்கி முடிவில் அது முகமாகத் தெரியும். இயக்குநரின் கச்சிதம் இங்கே பளிச்சிடும்.

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக்கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது மனதில் என்னவாகும்? திங்கள் வந்து காயும் போது என்ன தோன்றும்? இவை இரண்டுமே எழுத்தில் எழுத முடியாதவை. சொல்லில் சொல்ல முடியாதவை. அது போலவே வண்ணங்கள் என்று சொல்கிறார். இதில் கவனிக்கப் பட வேண்டியது, நாயகனுக்கும் அதே உணர்வு தான். கண் தெரியாதவருக்கு என்னவோ அதே தான் கண் தெரிந்த எனக்கும்.

எண்ணிலாத வண்ணங்கள் இருப்பதை எண்ணங்களோடு ஒப்பிட்டுச் சொல்கிறான் நாயகன். எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறும் என்று சொல்லும் போது திரையில் பச்சை வாழைப்பழம் பழுக்கிறது. மஞ்சள் தெரிகிறது. இயக்குநர் மீண்டும் ஒருமுறை தெரிகிறார்.

நான் உனக்காகச் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன் என்று பல்லவியை முடிக்கிறார். முதல் பல்லவி முடியும் போது நாயகன் நாயகியின் கையைப் பிடித்து ஒரு சிலையை வருட ஆரம்பிக்க, பின் நாயகி தானாகவே தொடர, அதைப் புரிந்து கொண்ட ஆனந்தத்தில் நாயகியின் முகத்தில் ஒளிரும் மகிழ்ச்சி அற்புதம்.

தொடரும் பின்னனி இசையில் வரும் காட்சி எனக்கு புரியவில்லை; இயக்குநர் நிச்சயம் ஏதோ சொல்கிறார்; புரிந்தவர் எனக்கு விளக்கவும். [நிறங்கள் ஒன்றை ஒன்று தனித்தனியே தேடிக் கொண்டிருக்க, அவை சேர்ந்து மத்தியில் மற்றொரு நிறம் உருவாகிறதோ?]

தொடர்ந்து,

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

இங்கே தனக்கும் நாயகனுக்குமான உறவிற்கான காரணம் ஏதுமில்லை என்று கவித்துவமாகச் சொல்கிறாள் நாயகி. காரணமில்லை, ஆனால் அது பூக்களின் சுகந்தத்தைப் போன்றது.

அதற்கு நாயகனின் பதில் இப்படி...
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

நாயகன் ஒரு பாடகன். அவன் மொழியில் சொல்லும் போது குயில்கள் பாடுவதைப் போல என்று கூறுகிறான். இங்கே கவிஞரின் கச்சிதத்தை கண்டு கொள்ளுங்கள்.
ஓட நீரோட
இந்த ஒலகம் அது போல

ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

உலகின் நிலையான்மையைப் பற்றி நாயகன் பாடும் போது, நாயகி காலம் பற்றிக் கூறுகிறாள். முடிக்கும் போது நிலையாய் இல்லாத நிறங்களைப் பற்றிக் கூறுகிறாள். நிறங்களைப் பற்றி முதன் முறையாக இங்கேதான் நாயகி பேசுகிறாள்... "நிலையாய் நில்லாது நினைவில் வரும் நிறங்களே..."

இதற்குப் பிறகு வரும் பிண்ணனி இசை அற்புதம். திரையில் வரும் காட்சி அதை விட.
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் எனோ சிலிர்க்குது

இதுவரை காரணமில்லாத, காரணம் தெரியாதவற்றைச் பாடிக் கொண்டிருந்த நாயகன், இப்போது தன் சிலிர்ப்புக்குக் காரணத்தைக் கூறுகிறான். "எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது" என்று கூறியவன் தனக்கு நேசம் பிறந்ததை ஈரத்தில் நிலம் துளிர்ப்பது போலிருப்பதாக அறிகிறான்.
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

இதுவரை அவள் அழகைக் கண்டதில்லை. ஆனால் இந்த நேசத்தினால் அழகெல்லாம் அவளில் கோலம் போடுகிறது.
குயிலே குயிலினமே
அத இசையாய் பாடுதம்மா

கிளியே கிளியினமே
அத கதையா பேசுதம்மா


இந்த நேசத்தைத்தான், காதலைத்தான், அழகைத்தான், குயிலும் கிளியும் பேசியும் பாடியும் சொல்கின்றன. மீண்டும் இந்த இடத்தில் குயில் பாடுவதை நாயகன் தான் கூறுகிறான்.
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

நாயகி புரிந்து கொண்டதாக நினைக்கும் வேளையில் அது மட்டுமல்லவே என்று நாயகன் கூறுகிறான்.

தொடரும் பல்லவியில் நாயகி தொடர்கிறாள், "தென்றல் வந்து தீண்டும் போது..." இதைப் பாடிக் கொண்டிருக்கும் போது மனக்கதவு திறக்கிறது; நிறங்களெல்லாம் அவள் மனதிற்குள் துள்ளிக் குதித்து ஓடி வருகின்றன. "வந்து வந்து போகுதம்மா...எண்ணமெல்லாம் வண்ணம்மம்மா" அவளுக்கு வண்ணங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. ஆனால் அவள் மீண்டும் ஒரு கேள்வி எழுப்புகிறாள்...
உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன

ஆக வண்ணங்களை அவள் பார்த்த பிறகும், மீண்டும் அதே கேள்வி தோன்றுகிறது.

என்ன அருமையான பாடல்.

நான் புரிந்து கொண்டது கவிஞர் சொல்ல வந்ததை விட வேறாகக் கூட இருக்கலாம். ஆனால் அதில் தான் அவருடைய வெற்றியிருக்கிறது.

ஜெயமோகன் அடிக்கடி இதைச் சொல்லுவார்

"...ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கும்போது வாசகன் நிரப்பிக்கொள்ள வேண்டிய இடைவெளிகள் உண்டு. அந்த இடைவெளிகளால் ஆன ஒரு சொந்த பிரதியை அந்த படைப்பில் இருந்து அவன் உருவாக்கிக் கொள்ளுவான். அதையே மறைபிரதி [Subtext] என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு விதம் என்பதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு நல்ல இலக்கிய ஆக்கம் ஒரு தனித்துவம் வாய்ந்த பிரதியை உருவாக்குகிறது. இவ்வாறு அது முடிவே இல்லாத பிரதிகளை உருவாக்குகிறது. இப்படி தன்னை பலவாக ஆக்கிக்கொள்வதன் மூலம்தான் அது இயங்குகிறது.

சொற்களால் ஆன ஒரு வடிவமே இலக்கியப் படைப்பு என்ற பேரில் நமக்குக் கிடைக்கிறது. அதிலிருந்து நாம் உருவாக்கிக் கொள்வதே இலக்கியத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள், உணர்ச்சிகள் எல்லாமே. ஒருமுனையில் இருந்து எழுத்தாளன் கற்பனைசெய்கிறான். மறுமுனையில் இருந்து வாசகன் பதில்கற்பனைசெய்கிறான். இவ்வாறு எழுத்தாளனுடன் சேர்ந்தே படைப்பில் ஈடுபடுகிறான் வாசகன்...."


இப்படித்தான் வாலி எழுதிய வரிகளில் உருவான என் கற்பனை இங்கே.

மீண்டும் சந்திப்போம்.


5 comments:

Unknown said...

i love this song :)

Suchi said...

Very very beautifully written. That was my first thought on reading this. Let me analyze it now syncing audio, video and lyrics and get back to you with a detailed comment!

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

மிக்க நன்றி விஷ்வா;

நன்றி மானஸா;

நான் அறிந்து கொண்டத் விடவும், இன்னும் நிரப்பப்படாத இடைவெளிகள் இந்தப் பாடலில் இருக்கலாம். குறிப்பாக இசையில்.

இசையறிந்தோர் கூர்ந்து கவனித்தால் ராஜாவின் கவிதை தெரியுமோ என்னவோ?

இந்தப் பாடலைப் பொறுத்தவரை மூவருமே தேர்ந்த இலக்கியவாதிகள். நாசரின், ராஜாவின் இலக்கிய ஈடுபாடு பல பேருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...

//Let me analyze it now syncing audio, video and lyrics and get back to you with a detailed comment!//

கண்டிப்பாக...

Unknown said...

அருமை